Wednesday, 6 February 2019

தேனின் இனிமை


தேனின் இனிமை 


HONEY


தேன் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள்வரை சுவைக்காகவும் உடல் நலத்திற்காகவும் விரும்பி எடுக்கும் உணவு இது மனிதர்கள் மட்டும் இன்றி கரடி, எறும்பு என  பலதரப்பட்ட உயிரினங்களுக்கும் பிடித்த உணவு. இதன் சுவை பயன் என பல பதிவுகளிலும், புத்தகங்களிலும், செவிவழி செய்தியாகவும் அறிந்திருப்பீர்கள். இன்று இந்த பதிவில் அதையும் தாண்டி தேனை பற்றிய முழு விவரங்களும் இங்கு உள்ளது என்பதற்கு நான் GUARANTEE.     



சித்த ஆயுர்வேத யுனானி சாத்திரங்களில் இருந்தும் புதிய விஷயங்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.



தேனில் புதிய தேன், பழைய தேன் என இருவகையில் எடுத்துக்கொண்டால் புதிய தேன் உடலுக்கு குளிர்ச்சி ஆரோக்கியமும், பழைய தேன் உடலுக்கு சூடும் நோய்நீக்கமும் செய்யும். இதை சாத்திர உதாரணத்தை பார்க்கலாம்.

அகத்தியர் 
" புதுத்தேன் பருப்பிக்கும் பூண்டிடுமெய் தானே 
மதுத்தான் பழையதுகேள் மானே கதித்த 
உடல் மெலியு முள்நிணமு மோடியுருகுங் காண் 
திடமுடனே தீயெனவே செப்பு "    

புதுத்தேன் மேல்படத்தில் காட்டிய நிறத்திலும், பழைய தேன் கருப்பு நிறமும் கொண்டிருக்கும் (வருட கணக்கில் சென்றது). புதுத்தேன் அதிகமாக உட்கொண்டாலும் எந்த தீங்கும் செய்யாது. ஆனால் பழைய தேன் TWO TABLE SPOON அளவு உட்கொண்டாலே உடலில் சூடும் வயிற்றுப்போக்கும் உண்டு பண்ணும். எனவே உடல் எடை குறைய பழைய தேனையே பயன்படுத்த வேண்டும் (PROGRESSIVELY INCREASE THE QUANTITY). புதிய தேன் உடலை பருக்கச்செய்யும்.     



ஒருசில பழைய தேனில் கற்கண்டு உண்டாகும் அதை பற்றி இறுதியில் பார்ப்போம். சித்தர்கள் சொன்னபடி தேன் சுத்தமான உணவு என்றாலும் அதையும் சுத்தி (PURIFICATION) செய்துதான் உணவில் சேர்க்கவேண்டும். அதை பற்றியும் இறுதியில் காண்போம். தேன் பொதுவாக பலவகை படும் அவை .....  




மலைத்தேன் 
"ஐயிரும லீளை விக்க லக்கிப்புண் வெப்புடல் நோய் 
பைய வொழியும் பசியுமுறும் வையகத்தி 
லெண்ணுமிசை யாமருந்திற் கேற்ற வனுபான 
நண்ணுமலைத் தேனொன்றி னால் "

பொருள் : மலைத்தேன் கபம். ஈளை, விக்கல், அக்கிப்புண், உடல்வெப்பம் நீங்கும் பசிஉண்டாகும். சித்த மருந்துகளுக்கு   அனுபானம் (MEDICINE CARRIER) ஆகும்.       

கொம்புத்தேன் 
" வாத பித்த வையத்தை மாற்றுமுளை மாந்தைதனைக் 
காதமென வோடக் கடியுங்காண் பூதரமாம் 
வம்புமுலை மாதே வருமருசி நீக்கிவிடுங்
கொம்புத்தே னன்றாகுங் கூறு "

பொருள் : வாதநோய், பித்தம், கபம், உட்புண் (தொண்டை,வயிறு), உணவில் ருசியின்மை போன்றவை விலகும்.     

மரப்பொந்துத்தேன் 
" பசிவெப்பாம் வாந்திமந்தம் பல்விக்கல் வெய்ய 
ருசிமுக்க பந்தூல ரோகங் கசிவகலாக 
கொந்துத்தேன் பாடுங் குழலணங்கே காவின்மரப் 
பொந்துத்தே னுண்டாயிற் போம் " 

பொருள் : பசி வெப்பம் வெப்பம் உண்டாகும், வாந்தி, சோர்வு, விக்கல், ருசியின்மை, தூலநோய் (உடல் பருமன்) போன்றவை விலகும்.  


புற்றுத்தேன் 
"கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கு 
மொப்பநின்ற வைய மொளிக்குங்காண் கொப்புளிக்குங் 
காசசுவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும் 
வீசுபுற்றுத் தேனுக்கு மெய் "

பொருள் : கபம், காசநோய், சுவாச பிரச்சனை,வாந்தி, கண்பார்வை கோளாறுகள் இவைகள் குணமாகும்.    


மனைத்தேன் 
" புண்ணும் புரையும்போம் போகாக் கரப்பனறு 
மெண்ணரிய தீபனமா மேந்திழையே கண்ணுகளிற் 
பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறும்  
பேச்சின்மனைத் தேனுக்குப் பேசு "

பொருள் : வீட்டில் கட்டும் தேன் கூடுகளில் கிடைக்கும் தேன் புண், அரிக்கும் குழிப்புண், கரப்பான் வகைப்புண், கண்ணில் ஏற்படும் விரணம், கண்ணில் புழு, கபம் போன்ற பிணிகள் நீங்கும்.      



புதியதேன் 
" ஆயுளுட னுட்டிணம ரோசி யகக்கபமு 
மேய வழகும் வளர்ந்திடுங்காண் தூய 
மதிய மெனுவதன மதரசே நாளும் 
புதிய நறுந்தேனாற் புகழ் "

பொருள் : புதுதேனால் ஆயுளும் கூடும், உஷ்ணம் நீங்கும், அழகு கூடும்,  கபம் உண்டாகும்.  

பழையதேன் 
"வாதப் பெருக்கை வயிற்றெரிவைத் தத்துறையைச்  
சேதப் படுத்து இன்னுஞ் செப்பவோ மாதரசே  
சத்திப் புறுமரசந் தன்னைத் தூண்டும் புளிப்புத் 
தித்திப் புறும்பழைய தேன்    "

பொருள் : இனிப்பும் புளிப்பும் கலந்த பழைய தேன் வாதநோயை உண்டாக்கும், வயறுஎறிச்சல் உண்டு பண்ணும், மூல நோயை உண்டாகும் காரணம் இது உடலில் சூட்டை ஏற்படுத்தும் குணம் கொண்டது. நிணத்தை (கொழுப்பை) கரைக்கும்.   





சித்தர்கள் தேனை அதிக அளவில் அனுபானமாக பயன்படுத்துகின்றனர். தனியாகவும் உணவிலும் சேர்க்கலாம். அதற்கான பல உதாரண பாடல்கள் உள்ளன. அதை இங்கு சேர்க்கவில்லை.  



தேனும் நீரும்  

தேரையர் 
"பயப்படு பிரசமுன் பழகுமைச் சுரம் 
பயப்படு மாறென"

தண்ணீரும் தேனும் கலந்து உட்கொள்ள பழைய (நீண்டநாள்) சுரம் நீங்கும்.



அகத்தியர் 
" காண் பிரசம் புட்பாதங் காரமது மாட்சிகமும் 
தேன் பெயரா நற்குணமோ தித்திப்பாம் ஊன்கொள் 
அதிசார மைமேக மாக்கு நோய் புண்காண
பதிசாரப் போமே பயந்து "

பொருள் : தேனுக்கு பிரசம், புட்பாதம், மது, மாட்சிகம் என பல பெயர்கள் உண்டு. இது உடலை தேற்றும், வயிற்றுபோக்கு, மேகம் (வெள்ளை படுத்தல்), புண்கள் இவைகளை குணமாக்கும்.    



"வாதமோ கபமே கக்கன் மகோதரங் குன்மம் புண்ணோய் 
ஏதமார் கண்ணோய் வாந்தி யீழையே கோழை யோடு 
வாதையார் நெஞ்செரிப்பு மந்தமே குக்கன் மாற்றும் 
ஓதிடு மலமுங் கட்டு மூவகையார் தேன் தான் மாதோ "

பொருள் :வாதநோய், கபம், கக்கிருமல், பெருவயிறு, வயற்றில் வாயு பிரச்சனை, புண்கள், கண்நோய், வாந்தி, கபம், கோழை, நெஞ்சுஎறிவு, சோர்வு, வயிற்றுபோக்கு இவைகள் குணமாகும்.          



ஆயுர்வேதத்தில் தேன் (ஆயுர்வேத சங்கிரகங்களில்)

எல்லா வகையான தேனும் சற்று வாதத்தை வளர்க்கும். குருகுணம் உள்ளது. குளிர்ச்சியானது. ரத்தபித்தம் (உடலில் இருந்து ஏதேனும் ஒரு முறையில் ரத்தம் தானாக வெளிவருதல்) யை குணமாக்கும். பித்தம் கபம் இவைகளை குணமாக்கும்.

தேன் உடலில் பிளந்த பொருளைச் சேர்க்கும்(எலும்பு தசை நார்), இறுகிப்போன தோஷங்களை பிளக்கும் (கபம்).  

தேனை சூடாக்க கூடாது. அடுப்பில் வைத்து சூடாக்கப்பட்ட தேனை பயன்படுத்துபவன் மரணமடைவான் (சரக ஸம்ஹிதை). சூடாக்கப்பட்ட தேன் விஷமாகும். இதே போல் வனிக்கொடி விதை (VANILLA - ICE CREAM FLAVOR), இசப்கோல் விதையும் சூடாக்கினால் இவை விஷமாக மாறிவிடும் (சில்விஷம்).

தேனை சேகரிக்கும் பூச்சி பல நல்ல மலர்களில் தேனை சேகரிப்பது போன்று விஷப்பூக்களிலும் தேனை சேகரிக்கும் எனவே தேனை தூய்மை படுத்தி உட்கொள்ள வேண்டும்.         

அயர்வேதத்தில் இன்னும் தேனை பற்றி உண்மைகளை ஆராய்ந்தால் நீளும், எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்.  



யுனானியில் தேன் (முகமதியர் மருத்துவம்) 
முகமது ஸல் (நபிகள் நாயகம்) அவர்கள் தேனை பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் எழுத காலம் இல்லை, எனவே சில குறிப்புகள் மட்டும் 

  • எந்த நோயும் எளிதில் ஏற்படாது 
  • வயோதிகம் மறைய 
  • பலஹீனம் இல்லாமல் இருக்க 
  • உடல் இளைக்க அல்லது பருக்க 
  • வறட்டு இருமல் நிற்க 
  • தொண்டை கட்டு குணமாக 
  • இளமையுடன் இருக்க 
  • அதிக ஆண்டுகள் வாழ  
  • புண் புரை ஆற 
  • தாகம் தீர 
  • ஏப்பம் விக்கல் நிற்க 
  • அவலட்சண உடல் அழகாக 
  • குழந்தைகளின் நோய்கள் நீங்க என அடுக்கிக்கொண்டு செல்லலாம் 


தேனில் உண்டாகும் கற்கண்டு 
" தேனீற் பிறந்த செழுங்கண்டாற் கண்விழிக்கு 
ளூனிற் படர்படல மோடிடுங்காண் கானகத்திற் 
காகுஞ் சுரமாகு மண்டும் பசிகபங்கா 
லேகுஞ் சுரமேகு மெண் "

பொருள் : கண்ணில் தோன்றும் படலம், சுரம் நீங்கும். பசி அதிகரிக்கும்.   

"தேனுறு கற்கண் டிற்கே திகழ்சுவை கஷாய ஸ்வாது 
உனமில் சீதம் ரூக்ஷ முறுமது ரவிபா கம்மே 
ஈனமாம் வாந்தி விக்க லிருஜ்சுர ரக்த தோஷம் 
பீனமார் கபஞ்சு வாசம் ரணமதி ஸாரம் பித்தம் "
பொருள் : இது மதுர சுவை உடையது, குளிர்ச்சியானது, வாந்தி, விக்கல், சுரம், ரக்த தோஷம், கபம், ரணம், வயிற்றுப்போக்கு, பித்தம் இவைகளை நீக்கும்.

        


தேன்மெழுகு 
தேன்கூடை (தேனடையை) சுத்தம் செய்த பின் அதை அடுப்பில் வைத்து உருக்கி அதில் உள்ள மெழுகை (WAX) பிரித்தெடுத்து பயன்படுத்தலாம். இது பொதுவாக சித்த வைத்தியங்களில் வெளிப்புற மருந்துகளில் (EXTERNAL OINTMENTS) ஆக  பயன்படுத்தப்படுகிறது. இது பற்றி பலசெய்திகள் உண்டு இங்கு இதை அலசவில்லை. இங்கு தேனை மட்டுமே விரிவாக காட்டியுள்ளேன்.   









தேனை தூய்மை செய்யும் முறை 

தேனடையில் சேகரித்த தேனை ஒரு துணியில் வடிகட்டி அதில் உள்ள பூச்சிகள் குப்பைகள் இருப்பதை நீக்க வேண்டும். இப்பொது தேன் தெளிவாக இருக்கும். இதை ஒரு வாயகன்ற சில்வர் பாத்திரத்தில் ஊற்றி (ஒரு லிட்டர்க்கு)  15 மிளகுகள் அதில் போட்டு அந்த பாத்திரத்தின் வாய்பகுதியை ஒரு துணியால் சுற்றி கட்டிவைக்க வேண்டும். பின் காலை முதல் மாலை வரை இதை வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாறு தேனை 10 நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைக்க வேண்டும்.
தேன் இளஞ்சூடாகும் விஷமாகாது இதில் உள்ள நீர் வற்றி தேவை இல்லாத விஷப்பொருட்கள் யாவும் அழிந்து தேன் சற்று பாகு போன்று இறுக்கம் அடையும். இப்போது தேனை மீண்டும் வடிகட்டி அதில் உள்ள மிளகை அகற்றி ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். இதுவே உண்மையான சித்தர்கள் சொன்ன தேன் சுத்தி முறை. இந்த தேன் உடலுக்கு நன்மை தவிர வேறு எதுவும் செய்யாது. இதை மருந்துகளுக்கு அனுபானமாக பயன்படுத்தினால் விரைவாக நோய் நீங்கும். 

இதில் சொல்லப்பட்ட எந்த கருத்தும் என் சொந்த கருத்து அல்ல, இவை அனைத்தும் நம் பாரம்பரிய மருத்துவர்களான சித்தர்களின் கருத்து. அதனால் தான் தேனை பற்றி எழுதும் ஒவ்வொரு இடங்களிலும் சித்தர்கள் சொன்ன பாட்டையும் (MANUSCRIPTS POEMS) அதற்கான விளக்கத்தையும் போதுமான அளவு தவறு இல்லாமல் கொடுத்துள்ளேன். இந்த காலத்திற்க்கு ஏற்றாற்போல் படங்களுடன் விளக்கமும் தெறிந்தவரை எழுதியுள்ளேன். இதில் தவறோ அல்லது சந்தகமோ இருந்தால் COMMENT இல் தெரிவியுங்கள்.

THIS ARTICLE BELONGS TO SIDDHARS
   
அனைவரும் பயன்படுத்தி நலமுடன் வாழ்க........

வாழ்க தமிழ் .....  வாழ்க தமிழர் 

ஓம் சரஹணபவ குக 
நன்றி வணக்கம் 
தொடரும் 


(IN LOT OF REFERENCES SAID THE EUROPEAN PEOPLES ARE USED A HUGE QUANTITY OF HONEY IN EVERY YEAR )





No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...