Monday, 25 February 2019

தாமரை - NELUMBO NUCIFERA

தாமரை 
NELUMBO NUCIFERA 

தாமரை என்ற பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது லட்சுமி தேவி, தேசிய மலர், கிடைப்பதற்கு சற்று அறிய  மலர், COSTLY ஆன மலர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் கொஞ்சம் அறியாத விஷயங்களையும், தாமரையின் வானளாவிய புகழையும் பார்க்கலாமா. இந்தியா முதல் எகிப்து வரை இதன் புகழ் நைல் நதி போன்று நீண்டும், கங்கை போன்று புனிதமாகவும் இருக்கிறது. அதனால் தான் என்னவோ இது பிரம்மா, சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள்களை தாங்கியும் சிவபெருமான் அம்பாள் போன்றோரின் கூந்தலையும் அலங்கரிக்கிறது.     


தாமரை இனத்தில் பலவகை உண்டு 
இதில் அல்லியையும் இங்கு நான் சேர்த்துக்கொள்கிறேன் 

செந்தாமரை - ஸ்ரீ லட்சுமி தேவி 
வெண்தாமரை - ஞானவல்லி சரஸ்வதி தேவி 

நீலோற்பலம் (நீலஅல்லி) (EGYPTIAN BLUE LILLY) -
ஸ்ரீ நீலோற்பலாம்பாள் (திருவாரூர் தியாகராஜர் மனைவி ) 

செவ்வல்லி (ரத்த நிற சிகப்பு பூ) - கேது பகவானுக்கு உகந்தது 
வெள்ளை அல்லி  - சந்திர பகவானுக்கு உகந்தது 

மஞ்சள் அல்லி இனம் ( NEPHUR LUTEUM )


                                                                     செவ்வல்லி 
                                                                   செவ்வல்லி 

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை தாமரை இனத்தை குறிப்பிட்டுள்ளேன். 

இனி வைத்திய பெரியவர்களின் கட்டுரைகளில் இருந்தும், அனுபவ வாயிலாகவும், சித்த வைத்திய சாத்திரங்களில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும் தாமரை மலர்வதை பார்க்கலாம்   

       

முதலில் மூலிகை மன்னர் கண்ணப்பரின் சேகரிப்பு 

தமிழரின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது தாமரை. சமயம், தத்துவம், காதல் போன்ற பல்வேறு துறைகளில் தாமரையை உவமை கூறாத கவிஞர்களே இருக்க மாட்டார்கள். மலர்களிலேயே மிகவும் சிறப்புடையது தாமரை.      

" பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை " - தேவாரம் 

என்று அக்காலம் முதல்,

"தண்ணீரிலே தாமரை பூ தள்ளாடுதே அலைகளிலே"  என்று இக்கால கவிஞர் வரை தாமரை உவமை ஆகிறது. சமயவாதிகள் தாமரை மலரிலே லட்சுமி உறைகிறாள் என்று தாமரையை லட்சுமி வழிபாடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஹோமங்களுக்கும் தாமரை பயன்படுத்தப் படுகிறது. சூரிய வழிபாட்டிலும் தாமரை பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு பல்வேறாக தாமரை தூய்மையான மலராக கொண்டாடப்படுகிறது. 

"நீரிடை உறங்கும் சங்கு நிழலிடை உறங்கும் மேதி 
தாரிடை உறங்கும் வந்து தாமரை உறங்கும் செய்யாள்    

என்று கம்பரும் தாமரை மலரில் லட்சுமி வாழ்கின்றாள் என்று குறிப்பிடுகின்றனர். 



நம் நாட்டின் தேசிய சின்னமாகத் தாமரை மலர் போற்றப்படுகின்றது. தத்துவ வாதிகள் மனித வாழ்வைத் தாமரையுடன் ஒப்பிடுவார்கள், "தாமரை இலைமேற் தண்ணீர் போலே" உலகில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பது அவர்கள் கூறும் வாழ்வியல் விளக்கம்.  

தாமரை தமிழகத்தில் எங்கும் சாதாரணமாக காணப்படும் நீர்வாழ் கொடியினம். காலையில் கதிரவனின் பொற் கிரணங்கள் தாமரை மொட்டினை அரவணைக்கும் போது, தாமரை மலரும். ஒவ்வொரு ஊரிலும் தாமரை குளங்கள் அக்காலத்தில் அமைக்கப்பட்டன. தாமரை இல்லாத பொய்கைகள் மக்களால் ஒதுக்கப்பட்டன என்பதை விவேக சிந்தாமணி பாடல் ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது,

"சந்திரன் இல்லா வானம் 
தாமரை இல்லாப் பொய்கை 
.............................................................
தனமில்லா மங்கை போலாம்"      

மலர்களிலேயே அரசி தாமரை என்று எகிப்திய நாட்டறிஞர் இம் மலரைப் போற்றுகின்றார்.
   

நீரிலும், சேற்றிலும் தாமரை வளரும். "சேற்றிலே மலர்ந்த செந்தாமரை" என்று நாட்டில் கூறுவர். குளங்களிலும், ஓடைகளிலும், ஆறுகளின் மருங்குகளிலும், சதுப்புகளிலும் தாமரைக் கொடி வளரும். அதிக ஆழமில்லாத நீருக்கு அடியிலே, சேற்றிலே வேரூன்றி, ஊர்ந்து படரும் கொடியினம். தண்டிலே கிழங்கு வளரும். பலமான தண்டாகவும்,  பருமனான தண்டாகவும் காட்சியளிக்கும். கிழங்கு மற்றவைபோல் மாவுச் சத்துடையது. தண்டிலிருந்து மிகப் பெரிய இலைகள் வளரும். இலையின் காம்பு நீளமாகிக் கொடி போல ஓடும். காம்பிலே முள் போன்ற அமைப்புகள் இருப்பதால் "முளரி" என்ற பெயரும் தாமரைக்குண்டு. இலை பெரும்பாலும் வட்ட வடிவமுடையதாக இருக்கும். இலையைப் பறித்து கைகளில் வைத்துக் கொண்டால், வீரன் கையில் கேடயம் இருப்பதுபோல் தோன்றும். நீருக்கு மேல் 1 அடி முதல் 2 அடி வரை உயரமாக நிற்கும். பாதரசத்தை தரையில் விட்டால் மணிபோல் உருளும். அதுபோல் தாமரை இலை மேல் தண்ணீர் விட்டால் முத்து மணிபோல் அவை உருளும். இலையின் மேல் உள்ள பசையுள்ள திரவமே இதற்குக் காரணம். 
   
தாமரை இருவகையாக காணப்படுகிறது. வெண்தாமரை, செந்தாமரை என அவற்றை அழைப்பர்.   

"வெள்ளைத் தாமரை பூவினிலிருப்பாள் 
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்"
            
என்ற பாடல், வெண்தாமரை கலைமகளின் இருப்பிடம் ஆகவும், செந்தாமரையில் திருமகள் வாழ்வாள் என்று வழக்கம் இருக்கிறது. இவையன்றி நீலத்தாமரை, மஞ்சள் தாமரை பூக்களும். ஓரிதழ் தாமரை, ஓரிலை தாமரை, ஆகாய தாமரை என பெயர்களில் பல மூலிகை இனங்களும் உண்டு.         
        


மருத்துவ பயன் 

தாமரையின் இலை, தண்டு, பூ, விதை ஆகியன அனைத்தும் மருத்துவத்தில் மிகுந்த பயன் தருவதாகக் கருதப்படுகிறது. இதன் சுவை துவர்ப்பும், இனிப்பும் உடையதாகும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். நெஞ்சில் சேரும் கோழையை அகற்றும். உடல் தாதுக்களில் காணப்படும் வெப்பத்தைத் தணிக்கும். உள்ளுறுப்புக்களில் தோன்றும் அழற்சியைப் போக்கும். உடலுக்கு டானிக் போன்று போஷாக்கை அளிக்கும்.       

வெண்தாமரை பூ இருதயத்திற்கும், மூளைக்கும் மிக நல்ல மருந்தாகும். செந்தாமரை பூ மூலச் சூட்டைத் தணிக்கும். தாமரை மலரில் உள்ள தேன் செந்தூரங்களுக்கு (சித்த மருத்துவத்தில் பெரிய மருந்துகள்) மிகச் சிறந்த அனுபானமாகும். தாமரை தேன் அருந்திவர உடல் அழகு பெரும். கண் நோய்கள் வராது. வெண்தாமரை மலருடன் பசும் பால் சேர்த்து சாப்பிட்டு வர உடல் கல்பமாகும். கண்களில் காணும் எரிச்சல், காய்ச்சல், தாகம் ஆகியவற்றை தாமரை மலர் சேர்ந்த குடிநீர் போக்கும்.

(சித்த வைத்தியர்கள் தாமரையை தைலமாகவும், லேகியமாகவும், சூரணமாகவும் (POWDER), கிருதமாகவும், குடிநீராகவும் மருந்துகளில் பயன்படுத்தினர் )                  


ஈரல் நோய்க்கு 

சாராயம், மது மற்றும் தீவிரமான மருந்துகளை சாப்பிட்டு ஈரல் பாதிக்கப்பட்டவர்கள் வெண்தாமரை பூவை குடிநீர் செய்து சாப்பிட்டு வர ஈரலில் தங்கும் வெப்பம் அகன்று உட்சூடும் குறைந்து ஈரல் பலப்படும்.  
பூவின் சாற்றை காலையில் 1 அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் இதய பலவீனம், ஈரல் கோளாறு, அசீரணத்தால் வரும் பேதி ஆகியன குணப்படும். பூவின் கஷாயம், பித்தத்தால் வரும் காய்ச்சலைக் கண்டிக்கும். 

தாமரைப் பூவை, தேன், பன்னீர், சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து மணப்பாகு செய்து தினம் 2 வேளை இரண்டு டீஸ்பூன் சாப்பிட்டு வர இருமல், ரத்தப்போக்கு, சீதபேதி ஆகியன குணமாகும். ரத்த மூலம் உள்ளவர்கள் 20 நாட்கள் மாமிசம், புளி, காரம் நீக்கி தொடர்ந்து இந்த மணப்பாகுவைச் சாப்பிட்டுவர ரத்தமூலம் குணமாகும்.          

அடிக்கடி வலிப்பு நோய் காணும் குழந்தைகட்கு தாமரைப் பூ கியாழம் சங்களவு கொடுத்துவர குணமாகும்.


"மகா ஏலாதி மாத்திரை" என்ற சித்த மருத்துவ மருந்தில் தாமரை மலரின் மகரந்தமும், தாமரை வளையம் ஆகியன சிறப்பான இடம் பெறுகிறது. தாமரை மலர் சேர்ந்த லேகியம், சூரணம் ஆகியன காச நோயையும், மார்ச்சளியையும் குணமாக்கும்.      

தாமரை விதை 

தாமரை வித்தினைப் பொடித்து தேன் கலந்து சாப்பிட உடலுக்கு கல்பமாகும் (சுத்தி செய்து). நீண்ட நாள் வாழலாம் என்பர் சித்தர்கள். வாய் ருசியின்மை, அயற்சி ஆகியன தாமரை வித்தால் போகும். 

மேக நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலிந்தவர்கள் தாமரை வித்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம். இதன் விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவி வர வாந்தி நிற்கும்.        




கிழங்கு 

தாமரை பூவிற்கு அடுத்தபடி தாமரை கிழங்கு மிகுந்த பயன் அளிக்கிறது. கண்களுக்கு ஒளி, தோலில் வரும் தவளைச் சொறி, வயிற்றுக்கடுப்பு ஆகியன நீங்கும்.    


மேகப் புண்கள் ஆறிட  (SYPHILIS DISEASES) 

பல்வேறு பெண்டிரைச் சேர்ந்ததன் பலனே பரிசே மேக நோய்கள். இந்நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் இன்றும் சரியான மருந்துகள் இல்லை. (வெள்ளை படுதல் அதிகமாகி மேகநோய் உண்டாகும்). இந்நோயில் புண்கள் வந்து விட்டால் (இதன் கொடூரத்தை இங்கு விளக்க விரும்ப வில்லை அதனால் இந்நோய் பற்றி அறிய நினைப்பவர் SYPHILIS என்று GOOGLE-ல் TYPE செய்து IMAGE-ல்  CHECK செய்து கொள்ளவும்), உடல் மிகவும் துன்புறும். இம் மேக புண்கள் தீர

தாமரைக் கிழங்கு   100 கிராம்    
பரங்கிச் சக்கை           30 கிராம் 
காசிக்கட்டி                    15 கிராம் 

இவற்றைத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினம் 1 வேளை 1 டீஸ்பூன் எடுத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர புண்கள் ஆறும். (உடல் சூட்டினாலும், பலமின்மையாலும் இந்நோய் காணலாம் சித்த மருத்துவத்தில் இதெற்கென பல நூறு மருந்துகள் உள்ளன - கூழ்பாண்ட கிருதம், கூழ்பாண்ட லேகியம், சதாவேரி கிருதம், சதாவேரி லேகியம், கதலி லேகியம், குங்கிலிய பஸ்பம், வெள்ளி பஸ்பம்.........ETC

தாமரைக் கிழங்கு பல்வேறு தைலங்களில் சேர்க்கப்படுகிறது. தாமரை கிழங்கு சேர்ந்த தைலம் கண்களுக்கு குளிர்ச்சியையும் மண்டை வறட்சியையும் போக்கும்.  


  தாமரை வளையம் என்று கூறப்படும் தாமரை தண்டு பல சித்த வைத்திய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது (ANTI VENOM)

தாமரை இலை சங்கு பஸ்பத்தை செய்வதற்க்குப் பெரிதும் சித்த மருத்துவர்களுக்கு உதவுகிறது. 
வள்ளல் பெருமான் தாமரையின் மருத்துவப் பயனைக் கீழ்க்கண்ட பாடலில் நன்கு கூறுகின்றார்.  

"பொற்பங் கயத்தின் புதுநறவுஞ் சுத்த சலமும் புகழ்கின்ற 
வெற்பற் தாமர மதிமதுவும் இளங்கும் பசுவின் தீம்பாலும் 
நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவை தீர்க்குங்
கற்பங் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே"

தாமரை பூ கண்களுக்கு குளிர்ச்சியையும், தாமரை வளையம் நஞ்சுகளை முறிக்கவும், தாமரையின் இதழ்கள் உடல் வசீகரத்தையும், தாமரையின் தாது மேகப் பிணிகளைப் போக்கவும், தாமரை கிழக்கு ஆண்மை சக்தி பெருக்கிற்கும் பயன்படும் என்று போற்றுகின்றார். 

தாமரை மலர் நிறைந்தது மருத நிலம். இந்நிலத்தில் வாழ்பவர்களுக்கு தாமரை மலர் தரும் தடுப்புச் சக்தியால் வாத, பித்த, கபப் பிணிகள் வாராது என்று சித்த மருத்துவ நூல் கூறுகிறது. 

"மருதநிலம் நன்னீர் வளம் ஒன்றைக் கொண்டே 
பொறதனில் மாறியநோய் போக்கும் கருத நிலத் 
தாறிரதஞ் சூழ அருந்தவரென்றார் பிணியெல்
லேறிரதஞ் கற்புவிக்கு மில்"       
   
  

புராணம் தரும் சான்று 

கௌதம முனிவரின் மனைவி மீது மோகம் கொண்டு அடாது செய்த தேவ லோகத்து இந்திரனுக்கு கிடைத்த தண்டனை அனைவருக்கும் தெரியும். அந்த தண்டனையிலிருந்து இந்திரன் விடுதலை பெற உதவியது தாமரை மலர் தான் என்று  புராணங்கள் கூறுகின்றன. அதுபோல் பூலோகத்து இந்திரர்கள் தவறாக சேர்ந்து பெற்ற மேகப் பிணிகளுக்கு தாமரை கிழங்கு, தாமரை மலரை நாடினால் மேகப் பிணிகள் விலகும் என்பதில் ஐயமில்லை.   


அரவிந்தம், சூரிய நட்பு, கேகயம், புண்டரீகம், பதுமம், முளரி, முண்டகம், பங்கயம் எனப் பல்வேறு பெயர்களால் சமயம், தத்துவம், கவிதை போன்ற துறைகளில் உள்ளவர்களால் போற்றப்படும் தாமரை சித்த மருத்துவர்களால் அதன் மருத்துவப் பயன் கருதி போற்றப்படுகின்றது. 
     

"ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும் போய் 
கோர மருந்தின் கொடுமையிலும் பாருலகில் 
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே காந்தல் விடும் 
வெண்டாமரைப் பூவால் விள்"




---------------------இதுவரை பார்த்தது மூலிகை மணி கண்ணப்பர் கட்டுரை 


அறிய விவரம் 

காமன் எய்யும் ஐந்து மலர்க்கணைகளில் தாமரையும், நீலத்தாமரையும் (நீலோற்பலம்) ஒன்று 




மன்மதன் கணைகளில் பயன்படுத்தும் ஐந்து மலர்கள் 

தாமரை இனத்தில் நீலத்தாமரை என்பது நீலஅல்லி இனத்தை சேர்ந்தது எனவும் இதன் பெயர் நீலோற்பலம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது எகிப்தியர்கள் பயன்படுத்திய காயகல்பம். நைல் நதியில் இது அதிகமாக கிடைக்கிறது. மேக நோய் மற்றும் மேக சூட்டை தணித்து தாதுவிருத்தி செய்யும் குணம் உள்ளது (EGYPTIAN BLUE LILLY).   



நீலோற்பலம் திருவாரூர் தியாகராஜ பெருமான் துணைவி பாலாம்பிகையை பூஜிக்க பயன்படுத்தப்பட்டது அதனால் அம்பாள் இங்கு நீலோத்பலாம்பாள் என்று அடியவர்களால் அழைக்கப்படுகிறாள். மூலிகைகளிலும், கல்பங்களிலும் இல்லற வாழ்விற்கு உரியன, துறவற வாழ்க்கைக்கு உரியன என இருவகைப்படும். அதில் இந்த நீலநிற தாமரை இல்லறவாழ்க்கைக்கு உரிய முதன்மை மூலிகையாக சாத்திரத்தில்  கருதப்படுகிறது.   




அழகு, தேஜஸ், வசீகரம், உடல்பலம், தீர்க்காயுள் போன்ற குணங்களை உடலுக்கு தரும் நீலோற்பலம். அதனால் தான் இதை எகிப்தியர்கள் தங்கள் மருந்துகளிலும் உணவுகளிலும் சேர்த்துள்ளனர். 

நீலோற்பலம் NYMPHAEA STELLATA 
"கண்ணுங் குளிரு மக்கி காணாது காந்து பித்த 
மெண்ணுந் தோஷம் மேக மேகும்காண் பெண்ணே 
வயிற்றுக் கடுப்பிரத்த மாறு நெய்தலுக்குப் 
பயித்தியம் போம் விந்தூறும் பார் "



உலக நிரந்தர அழகி என அனைவராலும் புகழப்படும் கிளியோபாட்ராவின் (CLEOPATRA) அழகை பராமரிக்க எகிப்தில் அவளுக்கு ஒரு மருத்துவ குழுவே இருந்துள்ளது. அவர்கள் ஒருமுறை அவளுக்கு கொடுக்கும் கல்ப மருந்து தயாரிக்க மூலிகைக்காக இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊதியூர் மலைக்கு வந்ததாக செவிவழி செய்தி உண்டு அவர்கள் வரலாற்றில் இந்த செய்தி உள்ளதாம். 







எகிப்தியர்கள் வாழ்வில் தாமரை இன்றியமையாததாக இருந்துள்ளது. எகிப்தியர்கள் வைத்தியம் பற்றி 1928 ஆம் வருடம் வெளிவந்த வைத்திய ஆராய்ச்சி புத்தகங்களில் இருந்து 

   


    
மாந்திரீகத்தில் அஷ்ட கர்ம வித்தைகள் உண்டு, அதில் தம்பனம் என்ற வித்தை பழக அதில் வெற்றி அடைய தாமரை மணிகள் (தாமரை விதை) ஜெப மணிகளாக ஆதிகாலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டன. இது வேத சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (அதர்வண வேதம்)



இன்னும் தாமரையை பற்றி எழுதினால் காலநேரம் போதாது. இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு ஆகிய நூல்களில் தாமரை, நூற்றிதழ் தாமரை என புகழும்,அறிய விஷயங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இலக்கியம் ஒரு பூக்காடு என்ற நூலை பார்த்தால் தாமரை பற்றி இன்னும் விஷயங்கள் அறியலாம் எனவே இங்கு இலக்கியங்களில் (காதல், மங்கை, மென்மை, மனம், காமம், சைவம், சிவம் சக்தி) உள்ள தாமரை பற்றி எழுதுவதை தவிர்க்கிறேன்.



தாமரை சிவ அர்ச்சனைக்கும் சக்தி வழிபாட்டுக்கும் ஆதியிலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பல உதாரணங்கள் ஆன்மீக, வேத நூல்களில் காணப்படுகின்றன.


 



இறுதியாக தாமரை பற்றி வைத்திய ரத்தினம் என புகழப்பட்ட நீதிபதி வி.பலராமய்யா கட்டுரையை பார்ப்போம்.

  






இந்த அழகனின் பாதங்கள் கூட தாமரைதான் 

"சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந் 
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் 
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட் 
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும் என் கண்ணுற்றதே"



நூற்றிதழ் தாமரை போன்று இங்கு செய்திகள் தொடர்ந்து விரியும் 

நன்றி வணக்கம் 


4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு. ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Nantri ayya ,,, nam munnnoorkalukkum chittharkalukkum....

    ReplyDelete
  4. mimosa hostilis root bark for sale MHRB Herp Store – Your Trusted Source for Mimosa Hostilis Root Bark Are you tired of sifting through countless vendors, unsure if you’re getting the real deal? Do you worry about the ethical implications of your purchase, wondering if the Mimosa Hostilis Root Bark (MHRB) you’re buying is sustainably sourced? At MHRB Herp Store, we get it. We’ve been in this field for years, and we know the concerns you face. That’s why we’ve built our entire business around providing high-quality, ethically sourced MHRB, with a focus on transparency and customer satisfaction. We’re not just another e-commerce site; we’re a team of passionate experts dedicated to ensuring you get the best possible product and experience. With our distribution center located in San Antonio, Texas we’re strategically positioned to provide fast and reliable shipping across the country.

    ReplyDelete

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...