Monday, 18 February 2019

தும்பை பெண் (Leucas Aspera)

தும்பை பெண் 
Leucas Aspera



தும்பை செடியைப் பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. நம் வீட்டு தோட்டங்களில், வெளிப்புற பகுதிகளில், கோவிலில் சிவபூஜைகளில், மருந்தாகவும் கண்டிருப்போம் கேட்டிருப்போம் படித்திருப்போம். இன்னும் கொஞ்சம் படிப்போமா ...........

தும்பையை பற்றி அறிய அவ்வளவு விஷயங்கள் உள்ளதா என கேட்டால். ஆமாம், பின் இருக்காதா ஒளவையார், சிவகலை, காரைக்கால் அம்மையார் என சிவபதம் அடைந்த சிவ பக்தைகளில் தும்பையும் முக்கியமானவர். ஆம் தும்பை என்ற செடியினம் ஒரு பெண். பொதுவாக சித்த வைத்தியங்களில் தும்பை விஷவைத்தியத்திற்காக பயன்படுத்தப் படுகிறது. இதன் விவரம் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். இதன் முழு விவரமும் இங்கு குறிப்பிடப்படுவது மூலிகை மன்னர் கண்ணப்பர் அனுபவமுறைகளும், பலராமய்யாவின் முறைகளும் முழுவதுமாய் கொடுத்துள்ளேன்.                




மூலிகை மணி கண்ணப்பரின் கட்டுரை 

தும்பைச் செடியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது, தும்பையும் ஆபத்துக் காலத்தில் உதவக்கூடிய மூலிகையே. ஏறக்குறைய ஒருஅடி வரை வளரக்கூடிய தும்பை நம் நாடெங்கும் காணக்கூடியது. இதன் மலர் ஒரே இதழை உடையது சுத்தமான வெண்மை நிறப்பூ. இந்த மலர் கால்களின் பாதங்கள் கீழ்நோக்கி இருப்பதுபோல காட்சி அளிப்பதால் "பாதமலர்" என்று சிலர் கூறுவார்கள்.



இதன் சமூலம் ( இலை, பூ, தண்டு, வேர் ) யாவும் பொதுவாக மலத்தை இளக்கி நீராக்கி வெளித்தள்ளும் குணமுடையது. அத்துடன் வாந்தியையும் உண்டாக்கும். சகல வித ஜந்துக்களின் விஷங்களையும் முறித்துவிடும் தன்மை வாய்ந்தது. கோழை என்ற கபங்களையும், விஷபூரிதமான நீர்கள் உடலைப்பற்றியதும் வெளியேற்றிவிடும். உடலுக்கு உஷ்ணத்தையும் கண்களுக்கு ஒளியையும் சிரரோகம் நேத்திர (கண்) ரோகங்களிலும் சிறப்பாக வேலைசெய்யும். மாதர்களின் உத்திரச்சிக்கலை சரிசெய்து கிரமமாக்கும்.      



இலை : தும்பை இலையில் நீங்காத விஷப்பூச்சிகடிகள், பாம்பு கடிவிசங்கள் இல்லை எனலாம். நாகபாம்பு முதல் எந்த பாம்பின் விஷமானாலும் முறிந்துவிடும். விபரம் : தும்பை இலையை மட்டும் சேகரித்து இடித்து சாறுபிழிந்து 1 அவுன்ஸ் வரை பாம்பு கடித்தவர்கள் குடிக்க வேண்டும் சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றை கலக்கி இரண்டு மூன்று தரம் பேதியாகும், வாந்தியும் கபத்துடன் சேர்ந்து வெளிவரும். பாம்பு கடியால் குளிர்ந்த உடல் மீண்டும் உஷ்ணம் ஆகும். இதுவே குணமாவதன் அறிகுறி, பாம்பு கடித்தவரை சுமார் 20 மணி நேரம் வரை உறங்க வைத்தல் கூடாது. மேலும் இரண்டு நாளைக்கு புதிய பானையில் பச்சரிசியும் பாசிப்பயறும் கலந்து பொங்கி அதைத்தான் ஆகாரமாக கொடுக்க வேண்டும். உப்பு, புளி, காரம் ஆகியவற்றை மூன்றாம் நாள் கொடுக்கலாம். (மருத்துவ வசதி இல்லா காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது )  பாம்பு கடித்தவர் மயங்கி விழுந்து வாயில் நுரை தள்ளி விட்டால் கவலை வேண்டாம். தும்பை சாற்றை மூக்கின் வழியாக சிறிது ஊற்றி வாயால் ஊதினால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளியும். உடனே தும்பை இலைச்சாற்றை 1 அவுன்ஸ் உள்ளே கொடுத்து மேற்கண்ட சிகிச்சையை ஆரம்பித்து கடிவாயிலும் தும்பை இலையை அறைத்து கட்டிவிட வேண்டும். மூக்கில் விட்டு ஊதியும் மயக்கம் தெளியவில்லை என்றால் அது ஆத்மீக மரணம் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.  பாம்பு கடிப்பதில் இரண்டு விதம் உண்டு 1.ஆதிஆத்மீகம் 2.அகஸ்மாத்தம் என்பதாகும். முதலாவது குறித்த நேரத்தில் எந்த விதத்திலும் எங்கு இருந்த போதிலும் வந்து கடிக்கும் இது தவிர்க்க முடியாதது. பூர்வ ஜென்ம வினையால் மூள்வது. இரு ஆத்மாக்களின் முந்திய பிறவியின் செயலால் நிகழும் ஆதிஆத்மீக அரவம் தீண்டுவது சிகிச்சை பலன் அளிக்காது.  அகஸ்மாத்தம் என்பது எதிர்பாராத விதமாக பாம்புகள் வசிக்கும் இடங்களுக்கு போவதாலும், அதை துன்புறுத்தலாலும், அதன் மேல் நம் உடல் படுவதாலும், இடி மழை மின்னல் அதிர்ச்சி பசி இவைகளால் மிரண்டுபோய் இடம் பெயர்ந்த நாகங்கள் எதிர்ப்படும் மனிதர், மிருகங்களைத் தீண்டும், இம்மாதிரியான விசக் கடிகளுக்கும் தும்பையின் சிகிச்சை மிக்க பயனுள்ளது. பிழைக்கவும் வழியுண்டு.               
( பின் குறிப்பு : இந்த முதலுதவி செய்கையில் பாம்பு கடித்தவன் கண்ணில் சிறுபீளை சாற்றை 2 துளிகள் விட்டுவிட வேண்டும் இதனால் பாம்பு விஷம் கட்டுப்பட்டு முறிவடையும் )


சிலர் தேள் கொட்டினால் கூட ஊசி போட்டுக் கொள்கிறார்கள் இப்படி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு பிராணன் போயிருக்கிறது. தேள் கொட்டிய ஒரு நண்பருக்கு ஊசி போட்டதன் பலன் ஒரு காலையே எடுத்து விட்டார்கள். தேள் கொட்டி குடைச்சல் வலி தாளாமல் துடிப்பவர்கள் தும்பை இலைச்சாற்றை 4 துளி, சிறிது தேன் கலந்து உள்ளுக்கு கொடுத்து கொட்டின இடத்தில் தும்பைச்சாற்றை தேய்த்துவிட வலி குறைந்து விஷம் முறிந்துவிடும். இவ்வாரே சகல விஷப்பூச்சி கடிகளுக்கும் செய்யலாம்.      



உடம்பின் மேற்காணும் சொறி, சிறங்கு, நமைச்சல் ஆகியவைகளுக்கும் குப்பைமேனி இலையை போலவே தும்பையை அரைத்து உடம்பில் தடவி குளித்துவர குணமாகிவிடும். கீழாநெல்லியின் நண்பன் தும்பை ஆகவே இந்த இரண்டு இலையுடன் கரிசலாங்கண்ணியும் சமமாக சேர்த்து மை போல் அரைத்து கீழாநெல்லி கட்டுரையில் (தொடரும் பதிவில் கீழாநெல்லியும் விரைவில் இடம்பெறும்) குறிப்பிட்டது போல அளவு முறைப்படி அனுசரிக்க காமாலை, பித்த பாண்டு (உடல் கருமை அடைதல்), ரத்த சோகை யாவும் நீங்கும். சீதளத்தால் வரும் மண்டையிடி, தலைவலி, பீனிசம் (குளிர்ச்சியால் தலை புருவம் வலித்தல் மூக்கில் நீர் ஒழுகல்), தொண்டை கபம் நீங்கும். 

     


மாதர்களுக்கு வாய்வு, வாத சம்பந்தத்தால் தலைமுழுக்கு தடைபட்டு தாமதம் ஆகும் போது, தும்பை இலை உத்தாமணி இலை சமமாக எடுத்தரைத்து காலை மாலை 1 அல்லது 2 சுண்டைக்காய் அளவு பசும்பாலுடன் சாப்பிட்டு புளி, அதிக காரம் நீக்கி பத்தியமாய் இருக்க மாதர் உதிரச் சிக்கல் உடைந்து மாதவிடாய் சரியாகும். 






  தும்பையை அகத்தியர் "சீறுகின்ற பாம்போடு சில்விஷங்கள் சென்னிவலி ஏறுகபம் மாந்தர்களே இருக்குமோ குளிர் சீதம் சன்னி விடும் தும்பை இலையால் " என்று புகழ்ந்து கூறுகிறார். 

பூ : தும்பையின் மலர் சுத்த வெண்மை நிறமானது. பச்சை கம்மல் போன்ற கதிர்களில் பூத்து கண்டவர்களின் மனதை கொள்ளை கொள்ளும். நம் நாட்டில் சனிக்கிழமை நீராடும் போது தும்பை மலர் எடுத்து நல்லெண்ணய் உடன் போட்டு காய்ச்சி முழுகும் வழக்கம் உண்டு. இதனால் சலதோஷம் தலைபாரம், தலையில் நீர் ஏறி கனத்து போதல். சிரரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் யாவும் தீரும். கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.  தும்பை பூவின் சாறு 4 துளி, உத்தாமணி சாறு 2 துளி, மிளகு தூள் 2 சிட்டிகையில் கலந்து சிறிது தேன் கூட்டி குழந்தைகளுக்கு காணும் வயிற்று கோளாறுகள் மாந்தம் பேதி ஆகியவற்றிற்கு கொடுக்க தீரும். தும்பைப்பூ சிறிதளவு ஒரு குவளை (டம்ளர்) ஜலத்தில் போட்டு காய்ச்சி 1/2 குவளையாக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேனும் விட்டு தினம் மூன்று வேளை கொடுத்துவர கண்நோய்கள், தாகம், சீதள சுரங்கள் குணமாகும். டைபாய்டு என்ற சன்னிபாத சுரம் காணும்போது கண்விழி நோவு, தலைவலி முதலியவற்றை நீங்க தும்பை பூவை 20 எடுத்து முலைப்பாலில் ஊரவைத்து ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில், கன்னப்பொட்டில் போட்டு வர, கண்ணில் 2 துளி விட்டும் வருவதால் தலைபாரம் நீங்கி நோய் சாந்தமாகும். 


   

       
தும்பை மலர் சிவார்ச்சனைக்கு உரிய முக்கியமான மலராகும். "ஆற்றை இதழி தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே" என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் கூறுகிறது.  



       
புராணங்களில் மூலிகைகள் பின்னிக் கிடக்கின்றன, வரலாறுகளில், சரித்திரங்களில், கதை காவியங்களில் இடம் பெற்ற மூலிகைகள் யாவும் மிகுந்த மருத்துவ பயன் உடையது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். 




தும்பையும் தேவலோக கன்னியாம். இவள் விதிவசப் பயனால் சபிக்கப்பட்டு பூலோகம் வந்தவள். தாசி குலத்தில் பிறந்து சிவனடியார்களுக்கே தனது உடலை அர்ப்பணம் செய்து பணிவிடைகள் செய்வது என உறுதி பூண்டாள். 








அதன்படியே செய்துவரும் போது சிவபெருமானே சோதனை செய்ய எண்ணியவர், சிவனடியார் வேடம் பூண்டு தும்பை இல்லம் வந்து தங்கினார். இவர் சரசலீலைகள் செய்யாமல் நோய் வாய்பட்டவர் போல் நடித்து வாந்தி பேதி இப்படியாக ஒரே ரகளை. தும்பை இதை வெறுக்கவில்லை ஏனெனில் இவர் சிவனடியார் ஆயிற்றே. தும்பைக்கு இரவெல்லாம் மல ஜலத்தை சுத்தம் செய்வதே பணியாகியது. பொழுது புலரும் தருணம் சிவனடியாருக்கு ஆவிபிரிந்து விட்டது (மரணம் அடைந்தது போல் சிவபெருமான் நாடகம் அரங்கேற்றினார்) 

என்ன செய்வாள் பாவம் இறுதி கடன் முடிக்க ஊராரைக்கூட்டி மயானத்திற்கு கொண்டுபோய் சவ அடக்கம் செய்வதற்க்கு முன் இரவு சிவனடியார் கொடுத்த பணத்தை காட்டி "ஐயோ அன்போடு வந்த இவருடைய இச்சையை பூர்த்தி செய்யாத பாவியானேன்" என்று கதறி அழுதாளாம். தும்பையின் பக்தியை மெச்சிய சிவபெருமான் காட்சிதருகிறார்.



    
சிவபெருமான் காட்சி தந்தபோது பலவிதமாக புளங்காகிதம் அடைந்து கண்ணீர் பெறுக அழுகிறாள். இந்த பாவிக்கும் நீ கருணை புரிந்தாயா என்று. சிவபெருமானும் தும்பையின் பக்தியில் உருகி "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தும்பை என்கிறார்"  சிவபெருமான் இவ்வாறு கேட்டவுடன் மகிழ்ச்சியில் திகைத்துப்போன தும்பை "எனது பாதம் உமது சிரசில் என்றும் இருக்க வேண்டும்" என்று வாய்விட்டு குழறி கேட்டு விட்டால். அவள் மனதில் உங்கள் பாதம் என்றும் எனது சிரசில் இருக்க வேண்டும் என நினைத்தவள் தான் வாய்குழறி கேட்டதை நினைத்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டால். அடியவர்களுக்கு என்றும் எதையும் மறுக்காத சிவபெருமான் மன்னிப்பு கேட்ட தும்பையை பார்த்து "பெண்ணே நீ வாயாக கேட்ட வரம் தான் சரியானது எனது அடியவர்க்கெல்லாம் தொண்டு செய்த உமது பெருமையே பெருமை" என கூறி தும்பை செடியாக்கி அதன் கால் பாதம் போன்ற வடிவம் உள்ள மலரை என்றும் தனது சிரசில் வைத்து கொண்டாராம்.   




     

பிரதி வருஷமும் காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடக்கும் போது இந்த தும்பை மலரை ஏராளமாக காணலாம். கூடை கூடையாக வெளீர் என்ற வெண்மை நிறத்தில் இம்மலர்கள் ஏகாம்பர நாதரின் மேலே காணும் போது  நமக்கு தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வையே உண்டாக்கும். தும்பை செடிக்கு சித்த நூல்களில் வைகுண்டம் என்ற பரிபாஷையும் உண்டு. 


     
ஆயுர்வேத வைத்தியத்தில் தும்பைக்கு "துரோணி புஷ்பி" என்று பெயர். இம்முறைப்படி தும்பையை கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள், காமாலை, இருமல், சீதபேதிகளுக்கும், விஷப்பூச்சி பாம்பு கடிகளுக்கும் உபயோகப் படுத்துவார்கள். டாக்டர் ஆர்.என்.சோப்ரா அவர்கள், தும்பையை எல்லாவித விஷப்பூச்சிகளுக்கும் சர்மரோகம் சீதள சம்பந்தமான நோய்களுக்கும் மிகச்சிறந்த மருந்து என கூறுகிறார்.

ஹோமியோபதியில் இதற்கு துரோன் அல்லது லூகாஸ் ஆஸ்பிரா என்று பெயர். பொதுவாக எல்லாவித விஷக்கடிகளுக்கும் தாய் திரவத்தில் 10 முதல் 15 துளி வரை உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கு கடிவாயில் தடவி வர குணம் கண்டுள்ளது .

சிவபெருமான் அணிந்துள்ள புலித்தோல், நாகங்கள், மண்டைஓடு, சுடுகாட்டுச் சாம்பல், ஆலகால விஷம், பிறைச்சந்திரன், கங்கை, ஊமத்தை, அருகு, தும்பை மலர் ஆகிய ஒவ்வொன்றும் புராண மகிமை வாய்ந்த ஆபரணங்களாகவே திகழ்கின்றன என்பதும் கவனிக்க வேண்டியவையே. 

இதுவரை தும்பையை பற்றி பார்த்தது மூலிகை மன்னர் கண்ணப்பர் அவர்களின் கட்டுரையாகும். நடுவே ஒரு சில இடைச்செருகல்களை சேர்த்துள்ளேன். அடுத்து வைத்திய ஜாம்பவானாக ஜட்ஜ் பலராமய்யாவின் பதிவுகளில் இருந்து......


                 



          

     
இங்கு தும்பையை பயன்படுத்தும்போது கண்டிப்பாக புளி,எலுமிச்சை, உப்பு நீக்கி உணவு உண்ண வேண்டும் என்று பலராமய்யா தெறிவித்திருப்பது மிகவும் உண்மை இது கண்ணப்பர் பதிவில் காணவில்லை. பாம்பு பூச்சி விசகடி, தோல் நோய்கள் என்ற முக்கியமான காலத்தில் இந்த பத்தியதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.       

சிறிய வயதில் இதன் பூக்களை பறித்து அதை திருப்பி அழுத்தினாள் அதன் பின்புற காம்பில் இருந்து தேன் வரும் அதை சுவைப்பதும் அந்த பூவை காதில் மூக்கில் மூக்குத்தி போன்றும் காதணி போன்றும் வைத்து விளையாடியது இன்றளவும் மனதில் பசுமையான நினைவாய் உள்ளது.     




தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி 


பூக்கள் தொடர்ந்து பூக்கும் 
நன்றி வணக்கம் 





No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...