கோளும் நாளும்
பகுதி - 1
நாம் செய்யவில்லை என்றாலும் நாள் செய்யும் என்பார்கள். அதுபோலத்தான் காரியங்கள் ஒரு மனிதனின் வாழ்வை நேரமும் காலமும் மாற்றி அமைக்கிறது. இந்திந்த நேரத்தில் இந்த காரியங்களைச் செய்யலாம், செய்ய வேண்டாம் என சாத்திரங்களில் பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளது. இது ஜோதிட சாத்திரத்தின் கீழ்வருகிறது. இந்த நேர காலங்களைப் பற்றி பகுதி பகுதியாய் அலசிப்பார்ப்போம்.
கிழமைகளின் விசேஷம்
ஜோதிட கணிதாமிர்தம் என்ற நூலில்
"பருதியில் உத்தியோகம் மதி விதை விதைக்க
பகரு குஜன் போர்செய்ய புதன் வித்யாரம்பம்
குரு விவாகஞ் செய்ய புகர் மயிர் கழிக்க
குற்றமில்லா சனிக்கிழமை தவஞ் செய்ய
கருதிய நல்லுத்தமம் என்றே அவனியோர்கள்
கண்டுணர்ந்த பலன் நடக்கும் என முன்னோர்கள்
கருதி இனிது உரைத்த விதங் கவனித்து ஓர்ந்து
சொல்லுவீர் ஜாதகர்க்கு பலனைத் தானே "
பொருள் :
ஞாயிற்றுக்கிழமை - உத்தியோகம் செய்ய ஆரம்பிக்கவும்
திங்கள்கிழமை - விதை விதைக்கவும்
செவ்வாய்க்கிழமை - போர் செய்ய தொடங்கவும்
புதன்கிழமை - கல்வி கற்க ஆரம்பிக்கவும்
வியாழக்கிழமை - திருமணம் செய்யவும்
வெள்ளிக்கிழமை - முடி திருத்திக்கொள்ளவும்
சனிக்கிழமை - தவம், தியானம், யோக பயிற்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும்
பொருத்தமான நாள்கள் என சாத்திரம் கூறுகிறது. இதில் சில விகற்பங்களும் உள்ளது அதைப்பற்றி "கோளும் நாளும்" கட்டுரையின் இறுதியில் காண்போம்.
"இவ்விதமே ஒவ்வொரு கிழமைகளுக்கும்
இசைந்த படியே சுபகாரியங்கள் செய்ய
எவ்விதமும் நலமாகும் மாநிலத்தோர்
எடுத்த காரியமெல்லாம் ஜெயமே ஆகும்
ஒவ்வியே எந்தெந்த காரியஞ் செய்தாலும்
ஒற்றுமையாய் சகல காரியமும் நன்றாய்
அவ்வவ்விதமான வாரந் தன்னில்
ஆகுமென முன்னோர் சொல் வாக்கியமே"
இதற்க்கு பொருள் சொல்ல அவசியமில்லை. இந்த பாடல் எளிதில் அனைவருக்கும் பொருள் தெரியும் படியாக அமைந்துள்ளது.
பல CONTENTS இந்த "கோளும் நாளும்" பகுதியில் உள்ளதால் இதை ஒரே பதிவாக தராமல் தனித்தனியாக பிரித்து பதிவிடுகிறேன்.
விருந்துண்பதற்கு உரிய நாள்கள்
கல்யாணம் ஆன புதுமண தம்பதிகள், நெடும்காலமாக நண்பர்களாக இருந்தவர்கள் வீட்டிற்கு விருந்துக்காக அழைப்பது, காதுகுத்து, குலதெய்வ வழிபாடு, சொந்த பந்தங்கள் போன்ற எந்த காரணத்திற்காகவும் வீட்டிற்க்கு வரும் உறவுகளுக்கு முதன்முதலில் விருந்து உணவு கொடுக்க சாத்திரத்தில் நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் படி முதல் விருந்தை ஆரம்பிக்க அந்த உறவுகளும், நட்புகளும் ஆயுள் முழுவதும் தொடரும்.
"வெள்ளி சனி திங்கள் விருந்துண்ண புதனுமாம்
கள்ள வியாழன் கசப்பிக்கும் கொள்ள கதிர்
தீராப் பகை காட்டும் செவ்வாய் தனக்குமே
வாராப் பகையும் வரும்"
பொருள் : மேற்கண்ட காரணத்தினால் ஒருவருக்கு விருந்து கொடுக்க முற்பட்டால் அவ்விருந்தை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமை கொடுக்க உறவு உத்தமம், புதன்கிழமையும் விருந்து கொடுக்க ஆகும். வியாழன் குருவினுடைய நாள் என்றாலும் இந்த நாள் விருந்து கொடுக்க உறவும், நட்பும் விரிசலடையும் (கசப்பிக்கும்).
ஞாயிற்றுக்கிழமை விருந்து கொடுக்க உறவும், நட்பும் தீரா பகை கொள்ளும். இந்த காலகட்டத்தில் 95% மக்கள் விருந்துண்ண ஞாயிற்றுக்கிழமையையே தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் அன்று தான் அனைவருக்கும் விடுமுறை நாள், ஆனால் விருந்துண்ண ஆபத்தான நாளாகவும் ஜோதிட கணித்தமிர்த சாத்திரம் கூறுகிறது. எனவே இனி இதன் மேல் நம்பிக்கை கொள்பவர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமையை விருந்துண்ண விலக்கவும்.
செவ்வாய் கிழமை விருந்து கொடுக்க உறவும், நட்பும் தீராத பகை கொள்ளுமாம் எனவே இந்த நாள் மற்ற எல்லா நாளைக் காட்டிலும் விருந்து கொடுக்க ஆபத்தான நாளாக உள்ளது.
நாளையும் கோளையும் மதிப்பவர்களுக்கும், நம்புகிறவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
இனி விருந்தை பசியோடும் அறிவோடும் சேர்த்துண்போம்
"கோளும் நாளும்"
அடுத்த பதிவு - 2
விரைவில்
No comments:
Post a Comment